ராகுலின் டுவிட்டர் மீண்டும் செயல்படத் தொடங்கியது

ராகுலின் டுவிட்டர் மீண்டும் செயல்படத் தொடங்கியது

2 mins read
cf330889-feb7-4616-a1a3-ff88020eb7b9
-
Google News Preferred Icon

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.

டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பில், அவரது பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

அது டுவிட்டரின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி ராகுல் காந்தியின் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

அதோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளும், அக்கட்சியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த ராகுல் காந்தி, "என்னுடைய கணக்கை முடக்கியதன் மூலம் டுவிட்டர் நிறுவனம் நமது அரசியலில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தைச் செய்வதற்காக நம்முடைய அரசியலை வரையறுக்கிறது.

"இந்தியர்களாகிய நாங்கள் கேள்வி கேட்கிறோம். மத்திய அரசுக்கு நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், நமக்கான அரசியலை நமக்காக வரையறுக்க நாம் நிறுவனங்களை அனுமதிக்கிறோமா?" எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தி மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களின் டுவிட்டர் கணக்கும் நேற்று செயல்படத் தொடங்கின. ஆனால் டுவிட்டர் நிறுவனம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதற்கிடையே, ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய காணொளியை பதிவு செய்ததற்காக நடவடிக்கை எடுக்கும்படி, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.