கேரள மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை ஈன்றெடுத்துள்ளார். சுதர்மா என்னும் அவர் தமது கணவர் சுரேந்திரனுடன் கொச்சி மாவட்டம், காயம்குளம் ராமபுரம் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்களின் ஒரே மகனான சுஜித், 35, சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். அதனால் சோகத்தில் மூழ்கிய இத்தம்பதி, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். இந்த முதிய வயதில் குழந்தையைச் சுமப்பது உடல்நிலைக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறியும் சுதர்மா பிடிவாதமாக இருந்தார்.
பின்னர் செயற்கை கருவூட்டல் முறை மூலம் 1.1 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரித்த பின்னர் அதன் எடை சற்று அதிகரித்தது. 72 வயதில் தம்மால் குழந்தை ஈன்றெடுக்க இயன்றதை எண்ணி சுதர்மா மகிழ்ச்சியுடன் உள்ளார்.


