போதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்

1 mins read
bbe2e320-1852-4be4-8b92-77e19ad60637
பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளனர். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

இந்தித் திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ள விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்தி நடிகைகளான ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 பேரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதில் சுஷாந்த்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதும் அவர் தன் காதலர் சுஷாந்துக்காக பல முறை போதைப்பொருள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைதானார். மேலும் ரியாவின் சகோதரர், சுஷாந்த் சிங்கின் மேலாளர் உட்பட மேலும் சிலரும் கைதாகினர்.

தொடர் விசாரணைகளின் முடிவில் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பலருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு முன்னிலையாகுமாறு நால்வருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் இந்தித் திரையுலகில் பரபரப்பு நிலவும் நிலையில் நால்வருக்குமான விசாரணையின் முடிவில் மேலும் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.