பாகனை தும்பிக்கையில் சுழற்றி அடித்து, மிதித்த திருப்பரங்குன்றம் கோயில் யானை; படுகாயமடைந்து உயிரிழந்த பாகன்

பாகனை தும்பிக்கையில் சுழற்றி அடித்து, மிதித்த திருப்பரங்குன்றம் கோயில் யானை; படுகாயமடைந்து உயிரிழந்த பாகன்

2 mins read
739a8acf-6a79-47ce-89bb-bb49a4ca2cbe
யானையைக் குளிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பாகனான 34 வயது திரு காளீஸ்வரனை ஆவேசத்துடன் தும்பிக்கையில் தூக்கி அருகில் இருந்த சுவற்றில் மோதி, காலால் உதைத்து வீசியது. படம்: ஊடகம் -
Google News Preferred Icon

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

அங்கு கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெய்வானை என்ற பெண் யானை ஒன்று வாங்கப்பட்டு வளர்க்கப்பட்டது. யானை கோயிலுக்கு வந்தபோது அதற்கு வயது 10.

கோயிலுகு முதலில் கொண்டுவரப்பட்டதிலிருந்தே தெய்வானை பிரச்சினை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாகன்கள் பயிற்சி அளித்ததையடுத்து, அது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

விழாக்காலங்களில் கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அந்த யானையை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானையையும் தரிசித்துவிட்டுப் போவது வழக்கம்.

ஊரடங்கு நடப்பில் இருந்த காலத்திலும் பாகன்கள் யானைக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

இந்திலையில், நேற்று (மே 24) மாலை 6 மணியளவில் யானையைக் குளிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பாகனான 34 வயது திரு காளீஸ்வரனை ஆவேசத்துடன் தும்பிக்கையில் தூக்கி அருகில் இருந்த சுவற்றில் மோதி, காலால் உதைத்து வீசியது.

மற்றொரு துணை பாகனான திரு ராஜேஷ் என்பவர் யானையைக் கட்டுப்படுத்த முயன்றும் யானை சமாதானம் அடையவில்லை.

சற்று நேரத்துக்குப் பிறகு யானையின் மீது திரு ராஜேஷ் தண்ணீரைத் தொடர்ந்து பீய்ச்சியடித்ததையடுத்து யானை சமாதானம் அடைந்தது.

சம்பவத்தில் படுகாயமடைந்த காளீஸ்வரனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். வனத்துறையினரும் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே,ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 38 ஜோடி மணமக்கள் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையாக மணமுடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்