ஆந்திரா: அனந்தபூரில் கொத்தடிமைகள் மீட்பு

ஆந்திரா: அனந்தபூரில் கொத்தடிமைகள் மீட்பு

2 mins read
65909385-7000-4148-a0e9-556e8d617833
-
Google News Preferred Icon

அனந்தபூர்: பன்னிரண்டு குழந்தைகள் உட்பட 32 கொத்தடிமைகளை உடனடியாக விடுவித்து அழைத்து வருமாறு ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு இந்தியாவின் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

அனந்தபூரில் உள்ள சாகர் செங்கற்சூளையில் இவர்கள் கொத்தடிமைகளாக மிகவும் துன்புறுத்தப்படுவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து கொத்தடிமையாக சிறை வைக்கப்பட்டிருந்த 12 சிறார்கள் உட்பட 32 பேரையும் விடுவிக்க மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர தலைமைச் செயலருக்கு அனுப்பிய நோட்டீஸில், இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் செங்கற்சூளை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தங்களுக்கு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அனந்தபூர் குழந்தைகள் நல கமிட்டி தலைவர் இந்த செங்கற்சூளைக்கு வருகை தந்து சிறார்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சோதனை மற்றும் வயது ஆகியவற்றை நிர்ணயிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் கர்லாதின் வட்டாட்சியர் இதனை கொத்தடிமை என்று கூறுவதை மறுத்து ஒடிசாவில் தொழிலாளர்கள் இடைத்தரகர் ஒருவரிடமிருந்து ஒவ்வொருவரும் ரூ.35,000 தொகை பெற்றனர் என்றார்.

ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கொத்தடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுதும் படிக்காத ஏழை மக்கள் வறுமையினால், வாழ்வாதாரத்திற்காக இடைத்தரகர்களின் வலையில் சிக்கி இப்படியாக கொத்தடிமைகளாகி விடுகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுபவர்கள் இத்தனை என்றால் கண்டுபிடிக்கப்படாமல் நாடு முழுதும் கடினமான வேலையில் சரியான உணவு, மருத்துவம், கல்வி இன்றி கஷ்டப்படும் கொத்தடிமைக் குழந்தைகள் ஏராளமானோர் மீட்கப்படாமல் இருக்கின்றனர் என்று மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.