சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்கும் இந்தியா

2 mins read
a4db5a17-4d4a-483a-b974-ee559b787332
இந்தியாவிலுள்ள ஓர் உற்பத்தி ஆலை. (படம்: ராய்ட்டர்ஸ்) -

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான சில நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவை நோக்கி கவர்ந்திழுக்கும் வகையில் நிதி சார்ந்த சலுகைகளை இந்திய அரசு அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் வரி விதிப்பிலும் சில சலுகைகள் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மின்னணு மற்றும் நுகர்வோர் பொருட்கள், மின் வாகனங்கள், காலணிகள், பொம்மைகள் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டது. தற்போது இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. இதன் எதிரொலியாக இந்திய கடலோரப் பகுதிகளில் தொழிற்பேட்டைகளை அமைக்க முடிவாகி உள்ளதாகத் தெரிகிறது. இத்தொழிற்பேட்டைகளில் தொழில்கள் தொடங்க உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாற்று உற்பத்தி தளத்தை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு இது பயனளிக்கும் என்றும் வர்த்தக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தித்தளம் வளர்ச்சி காணும் என்றும் பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' முழக்கம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி விகிதமானது, எதிர்வரும் 2020இல் நாட்டின் ஒட்டுமொத்த பொருளியலில் 25 விழுக்காடாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா, சீனா இடையேயான வர்த்தக அளவீட்டில் காணப்படும் இடைவெளி வெகுவாகக் குறையும் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள். இதற்கிடையே, நாட்டின் ஏற்றுமதி விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.

சீனாவில் இருந்து விலகிச் செல்லும் அமெரிக்க மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்கும் எனவும், ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற 150 பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சீனாவுடனான தொழில், வர்த்தக உறவை இந்திய ஏற்றுமதியாளர்களால் மேம்படுத்த முடியும் எனவும் அரசு கருதுகிறது.