வெளிநாடு சென்று கருவின் பாலினம் அறிந்தால் கடும் நடவடிக்கை

வெளிநாடு சென்று கருவின் பாலினம் அறிந்தால் கடும் நடவடிக்கை

1 mins read
e40725d1-112b-4da5-bdc8-c1e5d4a647a8
பாலினம் அறிவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று மீயொலி (அல்ட்ராசவுண்ட்) பரிசோதனை மேற்கொண்டு, கருவின் பாலினத்தை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், துறையின் செயலர் இந்தச் சட்ட செயல்பாடுகளின் ஆய்வை மேற்கொண்டார். சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியபோது, “கடந்த 1994ல் பெண் குழந்தைகள் கருக்கலைப்பைத் தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட இந்தச் சட்டமானது, 2003ல் திருத்தம் செய்யப்பட்டு கருவுறுதலுக்கு முன் பாலினத் தேர்வை தடை செய்யும் முறைகளும் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

வெளிநாடுகளுக்குச் சென்று மீயொலி பரிசோதனை மூலம் கருவின் பாலினத்தை அறிந்து கொள்வோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளால், 2021-22ஆம் ஆண்டில் 934ஆக இருந்த பாலின விகிதம், தற்போது 2025-26ஆம் ஆண்டில் 941ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் விதிமீறலில் ஈடுபட்ட 15 மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 1,727 அரசு மையங்கள், 7,343 தனியார் மையங்கள் என மொத்தம் 9,070 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண் சிசுக்கொலையைத் தடுத்து, பாலின விகிதத்தை மேலும் உயர்த்துவதே இக்குழுவின் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசுகாதார அமைச்சுஆய்வு