ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்குச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான ரவீந்திர பாரதி கலாசார நிலையத்தில் புகழ்பெற்ற பாடகரான எஸ்பிபியின் சிலை அமைந்துள்ளது. சிலையை இந்தியாவின் முன்னாள் துணையதிபர் எம் வெங்கையா நாயுடு திங்கட்கிழமை (டிசம்பர் 15) திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், கலைத் துறையினர், இசைக் கலைஞர்கள், குடும்ப உறுப்பினர்கள, ரசிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எஸ்பிபி, குரல் மூலம் நடித்தவர் என்று புகழாரம் சூட்டினார் திரு நாயுடு.
“அவர் பாடலை மட்டும் பாடவில்லை. பாட்டின் மூலம் நடித்தார். கமல்ஹாசன் உட்பட மற்ற மொழிகளின் நடிகர்களுக்காகப் பாடியபோது, அந்த நடிகர்களே பாடியதைப் போல்தான் எனக்குத் தோன்றியது,” என்றார் அவர்.
எஸ்பிபியின் சிலை, புதிய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் திரு நாயுடு குறிப்பிட்டார்.
எஸ்பி பாலா என்றும் ரசிகர்களால் அன்போடு இன்றும் அழைக்கப்படுபவர் காலஞ்சென்ற பாடகர் எஸ்பிபி. கிட்டத்தட்ட 50 ஆண்டில் அவர், 15க்கும் மேற்பட்ட மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியதாகத் திரு நாயுடு குறிப்பிட்டார்.
அவர் போன இடமெல்லாம் இந்திய நன்னெறிகளையும் விழுமியங்களையும் கொண்டுசென்றதாக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி ஸ்ரீதர் பாபு கூறினார்.
“சாதனைகளையும் விருதுகளையும் தாண்டி, நற்குணங்களுக்குப் பெயர்பெற்றவராக இருந்ததால்தான் அவர் இன்றும் தொடர்ந்து பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்,” என்றார் திரு ஸ்ரீதர் பாபு.


