புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற உள்ள பேரணி திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கின் உடல்நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 18) காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். மருத்துவமனைக்குச் சென்ற சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ, சோனம் வாங்சுக் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறினார்.
சர்க்கரை எதையும் உட்கொள்ளாததால் அவரது உண்ணாவிரதம் தொடர்கிறது. உப்பு கலந்த நீரை மட்டுமே அவர் பருகி வருகிறார். என்னிடம் முறையான அனுமதி பெறாமல் அவருக்கு எந்தவொரு மருந்தையோ அல்லது சிகிச்சையையோ அளிக்கக்கூடாது என்று கீதாஞ்சலி கூறினார்.
“சோனம் வாங்சுக் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடன் இருக்கிறார். அவரது உடலின் முக்கிய அவயங்களின் செயல்பாடுகள் சீராகவே இருக்கிறது,” என்று சாஃப்டர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவரை, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதே நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் காவல் துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
சோனம் வாங்சுக் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட செயலைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தொண்டர்கள், இடதுசாரி மாணவர் அமைப்பினர், ஆதரவாளர்கள் ஆகியோர் முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் ஆதரவாளர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தடுப்புக் காவலில் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் திங்கட்கிழமை (ஜூலை 20) திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
போராட்டக் களத்திலிருந்தவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கைக்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன என்றார் அவர்.
அமைதியான முறையில் நடைபெற்று போராட்டம் காவல் துறையினரால் கலைக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம் ஏ பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து அழித்து வரும் அமைப்பை சீரமைப்பதையோ, வினாத்தாள்கள் கசிவு போன்ற சம்பவங்கள் யாரின் தலைமையின் கீழ் நடந்ததோ அந்த கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யாமல், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
இது மோடி அரசின் சர்வாதிகாரத்தை வெளிக்காட்டியுள்ளது. மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவது பொறுப்புக்கூறல்களுக்கு மாற்றாக அமையாது என்று அவர் கூறியுள்ளார்.
தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.


