பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தாம் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பது உறுதியாகிவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, வியாழக்கிழமை (மே 28) தனது அமைச்சரவை சகாக்களுக்கு காலை விருந்து அளித்தார் முதல்வர் சித்தராமையா.
பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பதவி விலகும் முடிவை அமைச்சர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திரு டி.கே. சிவகுமார், பதவி விலகிய சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், இருவரும் ஆரத் தழுவிக்கொண்டனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் எனச் சமமாகப் பிரித்துக்கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, டி.கே. சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.
இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து காங்கிரஸ் தலைமை கடந்த ஆண்டே பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அண்மையில் டெல்லியில் மீண்டும் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.
சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்த தகவல் உறுதியானதும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டமாக, கர்நாடக மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுவார்.
அதன் பின்னர், அவர் அதிகாரபூர்வமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார்.
அதற்கு முன்னதாக தமது ராஜினாமா கடிதத்தை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் நடப்பு முதல்வர் சித்தராமையா ஒப்படைப்பார்.

