திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளதை ஹேமா குழுவின் அறிக்கை வெளிக் காட்டியுள்ளது. பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கைக்கு பின், பல நடிகைகள் தாங்கள் மலையாள திரையுலகில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கினர். அதையடுத்து மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலையாள நடிகை ஒருவர், கடந்த 2016ஆம் ஆண்டு, மலையாள நடிகர் சித்திக் தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சித்திக் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதையடுத்து அவர் மலையாளத் திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்களை காவல்துறை மீட்டுள்ளதாக தெரிகிறது. விடுதியில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார்தாரரும் ஒரே காலகட்டத்தில் விடுதியில் தங்கியிருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், தான் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படக் கூடும் என்ற அச்சத்தில் அவர் முன்பிணை கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். அந்த மனுவை செப்டம்பர் 24ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சித்திக், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த புகார்கள் தொடர்பாக இதுவரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

