லக்னோ: சிறார்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி. இவர் வாரணாசியில் உள்ள தனது வித்யா மடம் என்ற ஆசிரமத்தில் பல சிறுவர்களைத் தங்கவைத்துப் படிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. இதை அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இதனிடையே, அவர் மீது குற்றஞ்சாட்டிய ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் உள்ளிட்ட சிலர் காவல்துறையில் புகார் அளித்தனர். எனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அசுதோஷ் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஆசிரமம் இயங்கி வரும் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் வைத்து பல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அசுதோஷ் தரப்பினர், அதற்கான காணொளி ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும், ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, சாமியார் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அசுதோஷ் சாடியுள்ளார்.
ஆன்மிகப் போர்வையில் சாமியார் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சாமியார் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

