கனமழை தொடர்வதால் மும்பையில் இரண்டாவது நாளாக பள்ளிகள் மூடல்

நிலச்சரிவால் முடங்கிய போக்குவரத்து

கனமழை தொடர்வதால் மும்பையில் இரண்டாவது நாளாக பள்ளிகள் மூடல்

1 mins read
da0d59d6-bf55-4116-8241-801296585143
மழைநீரில் மூழ்கியுள்ள தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்ற மும்பை மக்கள். - படம்: இபிஏ
Google News Preferred Icon

மும்பை: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 7) அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை சிவப்பு எச்சரிக்கை காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மழை நீடிப்பதால் இரண்டாவது நாளாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மும்பை நோக்கி வந்த ஐந்து அனைத்துலக, உள்நாட்டு விமானங்கள் அருகிலுள்ள பிற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

திங்கட்கிழமை பெய்த கனமழையால் மும்பை - புனே விரைவு ரயில் பாதையில் உள்ள சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருவழிகளிலும் போக்குவரத்து தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுள்ளபோதும், ஒரு பாதையில் இன்னும் நீர் வழிந்தோடுவதால் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

புனே மாவட்டத்தின் மாவல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாள்களாக மகாராஷ்டிராவில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துவிட்டனர் .

குறிப்புச் சொற்கள்