ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

2 mins read
இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
75a1ed87-9565-4835-bbc4-1ddc9a36bae0
இந்தியா - ஜப்பான் கூட்டுப் பொருளியல் மன்றத்தின் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சானே தக்காய்ச்சி. - படம்: பிடிஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்தர மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தக்காய்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றார்.

டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இருநாட்டுப் பிரதமர்களும் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாகப் பல முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் ஏறக்குறைய 800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தித் தொழிற்சாலையை இரு பிரதமர்களும் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.

உலகின் மிகப்பெரிய கார் ஆலைகளில் ஒன்றான இதில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இது படிப்படியாக 10 லட்சமாக உயர்த்தப்படும்.

முக்கிய ஒப்பந்தங்கள், திட்டங்கள்

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் போர்க்கப்பல்களுக்குத் தேவையான சிறப்பு அலைவாங்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் எதிரிகளின் ரேடார்களால் இரு நாட்டுப் போர்க்கப்பல்களையும் கண்டுபிடிக்க முடியாது. அத்துடன், இரு நாட்டுக் கடற்படைகளும் விரைவில் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

மும்பை - அகமதாபாத் இடையே மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ஜப்பானின் அடுத்த தலைமுறை ‘இ-10 ஷிங்கன்சென்’ புல்லட் ரயில் சேவை 2027ல் தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் மும்பையிலிருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் செல்ல முடியும்.

இந்தியா-ஜப்பான் உயிர்எரிவாயுத் திட்டத்தின்கீழ் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த நாடு முழுவதும் புதிதாக 1,000 உயிர்எரிவாயு, இயற்கை உரத் தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, கச்சா எண்ணெய்க் கையிருப்பை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப உதவி, மின்கலம், பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி, மருந்து உற்பத்தி, ஆகியவற்றுடன் நிதிச் சேவைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய், ஜப்பானிய யென் நாணயங்களில் வணிகம் மேற்கொள்ளும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த இரு நாடுகளும் தீவிரம்காட்டி வருகின்றன.

கூட்டணியைத் தாண்டி இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் குடும்ப உறவை வெளிப்படுத்தினர். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தக்காய்ச்சியை ‘எனது அழகிய இளம் தங்கை’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் சானே தக்காய்ச்சி, “பிரதமர் மோடி என்னை தங்கை என்று அழைத்து உறவு பாராட்டினார். அவர் எனது அண்ணன். நாங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக இணைந்து செயல்படுவோம்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்