கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தலையொட்டி கோல்கத்தா சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உறுதி; 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 45 நாள்களுக்குள் நடைமுறை; மாநில அரசு வேலைவாய்ப்புகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு; பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க பெண்கள் காவல்துறை; குர்மாலி, ராஜ்போங்ஷி ஆகிய மொழிகள் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் சேர்ப்பு; 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், அரிசி, உருளை, மாம்பழம் சாகுபடிக்கு அரசு ஆதரவு; தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும்; மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மீன்கள் ஏற்றுமதி வலுப்படுத்தப்படும். கால்நடைகளைக் கடத்துவது தடை செய்யப்பட்டு அவைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளையும் அவர் அளித்தார்.
ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜகவின் அனைத்துத் திட்டங்களையும் மேற்கு வங்கத்தில் முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று அமித் ஷா கூறினார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியமைக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றனர்.

