புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சநிலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் (பிரகடனம்) 86 நாடுகள், இரு அனைத்துலக அமைப்புகளின் ஆதரவோடு ஏற்கப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இம்மாநாட்டின் மூலம் 270 அமெரிக்க பில்லியன் டாலருக்கு மேலான (ரூ.24 லட்சம் கோடி) முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் இந்தியா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
டெல்லியில் சனிக்கிழமை (பிப்ரவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவால் மக்களை மையப்படுத்திய ‘ஏஐ’ தொலைநோக்குப் பார்வை முன்வைக்கப்பட்டதாகவும் அது உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
‘ஏஐ’ உச்சநிலை மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்களை இம்மாநாட்டின் மூலம் இந்தியா ஒருங்கிணைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் ‘ஏஐ’ செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா தன்னை முக்கியமான நாடாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
டெல்லி ‘ஏஐ’ மாநாடு, அதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் ஈடுபாட்டை இது பிரதிபலிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சி கண்டுவரும் சூழலில் இத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த உலகின் நம்பிக்கையை டெல்லி உச்சநிலை மாநாடு பிரதிபலிப்பதாக திரு அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். இதையடுத்து மாநாட்டின் பிரகடனத்தை 86 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏழு முக்கிய அம்சங்களின் மீது இந்தத் தீர்மானம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஏஐ’ வளங்களை ஜனநாயகமயமாக்கல், பொருளியல்-சமூகநலப் பாதுகாப்பு, நம்பகமான ஏஐ, அறிவியலுக்கான ஏஐ, சமூக அதிகாரமளித்தலுக்கான அணுகல், மனித மூலதன மேம்பாடு, மீட்புத்திறன்-புத்தாக்கமிக்க ஏஐ அமைப்புமுறை ஆகியவை டெல்லி மாநாடு தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
மேலும், ஏஐ மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் மனிதகுலத்துக்குச் சமமாக கிடைக்க வேண்டும் என்று டெல்லி மாநாடு வலியுறுத்தியுள்ளது என்றும் அனைவருக்கும் நல்வாழ்வு-மகிழ்ச்சி என்ற கோட்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

