ரூ.1,500 கோடி ரூபாய் இணைய மோசடி; பெண் உட்பட 9 பேர் கைது

ரூ.1,500 கோடி ரூபாய் இணைய மோசடி; பெண் உட்பட 9 பேர் கைது

2 mins read
264b757c-4013-4cba-be9a-7fdb93253f12
பல்வேறு தனியார் வங்கிகளில் 15 கணக்குகள் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டு, மோசடி அரங்கேற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான இணைய மோசடி தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் இவ்வழக்கில் இதுவரை பிடிபட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது என்று காவல்துறை வியாழக்கிழமை (பிரவரி 26) தெரிவித்தது.

தெலங்கானாவைச் சேர்ந்த அடிலுதீன் முகம்மது என்பவர் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார். இவர் மோசடிக் கும்பலுக்கு உடந்தையாக இருந்து, போலி வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதிலும், பின்னர் ‘அங்காடியா’ எனும் பாரம்பரியத் தூதுவர் முறை மூலம் பணத்தைப் பெறுவதிலும் ஈடுபட்டதாக ராஜ்கோட் (ஊரக) காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜய் குர்ஜார் தெரிவித்தார். கைதான மற்ற இருவர் ராஜ்கோட்டைச் சேர்ந்த மிகிர் ரங்கானி மற்றும் ஹிரேன் லிம்பாசியா என அடையாளம் காணப்பட்டனர்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் சந்தை நிறுவனக் கணக்குகள் மூலம் மோசடி

வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின்கீழ் இயங்கும் நிறுவனங்களின் பெயர்களில் பல்வேறு தனியார் வங்கிகளில் 15 கணக்குகள் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டு, இம்மோசடி அரங்கேற்றப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அக்கணக்குகளைப் பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து விளக்கிய காவல்துறைக் கண்காணிப்பாளர் விஜய் குர்ஜார், “மற்ற வணிகக் கணக்குகளைப் போல வேளாண் சந்தை சார்ந்த கணக்குகளுக்கான ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் (TDS) விதிமுறைகள் கடுமையாக இல்லாததால், அவற்றை எளிதாகத் தவறாகப் பயன்படுத்த முடிந்தது,” என்றார். அக்கணக்குகள் வழியாக இணைய மோசடிப் பணம், சூதாட்டம் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான நிதி என மூன்று பிரிவுகளில் பணம் கைமாறியுள்ளது.

அந்தக் கணக்குகள் மூலம் ஏறக்குறைய 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடிக் கும்பல் தொடர்பாக இணையக் குற்றப் பதிவுத் தளத்தில் மொத்தம் 180 புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 21 புகார்கள் குஜராத்தைச் சேர்ந்தவை (ரூ.2.94 கோடி) என்றும் எஞ்சிய 159 புகார்கள் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை (ரூ.20.21 கோடி) என்றும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்