மும்பை மேயர் பதவி: 44 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியின்றித் தேர்வு

மும்பை மேயர் பதவி: 44 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியின்றித் தேர்வு

2 mins read
71555b28-f71b-449c-bab6-ca0fcf62629b
மும்பை மேயரான ரிது தாவ்டே. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மும்பை: மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக பாஜகவைச் சேர்ந்த ரிது தாவ்டே பதவி ஏற்றார்.

44 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையின் மேயராக போட்டியின்றித் தேர்வானவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதனிடையே, மும்பை மாநகர துணை மேயராக சஞ்சய் சங்கர் காதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவரும் மாநகராட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 11) பதவியேற்றனர்.

மும்பை மாநகராட்சிக்கு கடந்த ஜனவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணிக்கு 118 இடங்கள் கிடைத்தன. மொத்தமுள்ள 227 இடங்களில் சிவசேனா (உத்தவ்) கட்சிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மும்பை மாநகராட்சி மேயர் பதவி, பொது பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவின் 132வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டே புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாநகராட்சி தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ள ரிது, மாநகராட்சியின் கல்விக்குழுத் தலைவராக பொறுப்பு வகித்த அனுபவம் உள்ளவர். துணை மேயர் சஞ்சய் சங்கர் காதி, சிவசேனா (ஷிண்டே) கட்சியைச் சேர்ந்தவர்.

மேயர், துணை மேயர் பதவிகளுக்குப் போட்டியிட்ட இருவரையும் எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில், கடந்த புதன்கிழமை பதவியேற்றனர்.

மும்பை மாநகரின் 78வது மேயராக ரிது தாவ்டே பதவியேற்றபோது பாஜக உறுப்பினர்கள், ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்றும் ‘பிரதமர் மோடி வாழ்க’ என்றும் முழக்கமிட்டனர்.

இந்தியாவின் ஆகப் பணக்கார மாநகராட்சி என்று பெயரெடுத்துள்ள மும்பை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பு ஏறக்குறைய ரூ.74,000 கோடியாகும்.

மாநகராட்சியின் இரண்டாவது பாஜக மேயர் என்ற பெருமையும் ரிது தாவ்டேவுக்கு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்