வணிக எரிவாயுத் தட்டுப்பாட்டால் முடங்கிய உணவகங்கள்

வணிக எரிவாயுத் தட்டுப்பாட்டால் முடங்கிய உணவகங்கள்

2 mins read
இந்தியாவில் சர்க்கரை, சமையல் எண்ணெய்க்கான தேவை குறைந்தது
6c4cf127-ad69-4bd1-a25c-1fbff22d5e1f
அகமதாபாத்தில் எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக நிலக்கரி அடுப்பில் ரொட்டிச் சமைக்கும் ஆடவர்.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவில் வணிக ரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்களால் முழு நேரமும் செயல்பட முடியாமல், தங்களது சமையல் நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளன. சில உணவகங்கள் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் தயாரித்து வருகின்றன.

இதனால், சர்க்கரை, சமையல் எண்ணெய்க்கான தேவை குறைந்து வருகிறது.

பொதுவாகக் கோடை விடுமுறையின்போது இனிப்பு வகைகள், குளிர்பானங்களின் தயாரிப்பு அதிகமிருக்கும். ஆனால் எரிவாயு இல்லாததால் இவற்றின் தயாரிப்பும் சரிந்துள்ளது.

இந்நிலையில், இந்தோனீசியா, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் வரத்து குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் ஏறக்குறைய 9 விழுக்காடு குறைந்து 1.2 மில்லியன் டன்களாக உள்ளது என்று இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் மன்றத்தின் நிர்வாக இயக்குநர் பி.வி. மேத்தா தெரிவித்துள்ளார்.

சமோசா, சோலே பட்டூரா போன்ற அதிக எண்ணெய்யைப் பயன்படுத்தி பொரிக்கப்படும் உணவுகளை விற்கும் சாலையோரக் கடைகளும் உணவகங்களும் எரிவாயுத் தட்டுப்பாட்டால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சோலே பட்டூரா கடை நடத்தி வரும் மனோஜ் யாதவ் கூறுகையில், “கடந்த வாரம் எரிவாயு தீர்ந்ததால் கடையை நடத்த முடியாமல் போனது. இந்த வாரம் ஒரே ஒரு எரிவாயு உருளை கிடைத்துள்ளது, இது பத்து நாள்களுக்கு மேல் வராது. எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்து மூன்று வாரங்களாகியும் வரத்து இல்லை,” எனத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக எண்ணெய், எரிவாயு இறக்குமதியில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய எல்பிஜி இறக்குமதியாளரான இந்தியா, கடந்த சில தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான எரிவாயு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
எரிவாயுமும்பைஇறக்குமதிஎண்ணெய்தயாரிப்பு