ஊராட்சி மன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் மலைப்பாம்பை வீசிய உள்ளூர்வாசிகள்!

ஊராட்சி மன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் மலைப்பாம்பை வீசிய உள்ளூர்வாசிகள்!

1 mins read
8faddb6e-5152-43fe-85da-75c528bc5638
சாக்குப்பைக்குள் போட்டுக் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட மலைப்பாம்பு. - படங்கள்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

பத்தனம்திட்டா: ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டு வளாகத்திற்குள் பொதுமக்கள் மலைப்பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், செந்நீர்க்கரையில் வியாழக்கிழமை (டிசம்பர் 28) இரவு நிகழ்ந்ததாக ‘மனோரமா’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

மலைப்பாம்பு தென்பட்டதை அடுத்து, அதுகுறித்து அப்பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினர் பிந்து டி சாக்கோவிற்குத் தகவல் தரப்பட்டது.

ஆனாலும், பாம்பைப் பிடிக்க வனத்துறையினர் வருவதற்குத் தாமதமானதாகக் கூறி, சிலர் அதனைப் பிடித்து, ஒரு சாக்குப்பையில் போட்டுக் கட்டி, இரவு 11.30 மணியளவில் அதனை பிந்துவின் வீட்டு வளாகத்திற்குள் வீசினர்.

இதன் தொடர்பில் பிந்துவின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

மலைப்பாம்பு குறித்து தகவல் அறிந்ததும் பிந்து அதுபற்றி வனத்துறைக்குத் தகவல் தந்ததாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறினர்.

பின்னர், வனத்துறையினர் பிந்துவின் வீட்டிற்குச் சென்று, அந்த சாக்குப்பையில் இருந்த மலைப்பாம்பைப் பிடித்துச் சென்றனர்.

தகவல் கிடைத்த 45 நிமிடங்களுக்குள் வனத்துறையினர் சம்பவ இடத்தை அடைந்துவிட்டதாகக் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பிந்துவின் அரசியல் எதிரிகள் சிலர் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்