சென்னை: தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தமிழக ஆளுநர் மாளிகை மாறுபட்ட வழிகாட்டுதல்களை அளித்ததாகக் கேள்விப்படுகிறோம். அது தவறான செயல்பாடு என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது தவறான போக்கு என்றார்.
நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.
தமிழக ஆளுநர் அர்லேகர் கலந்துகொண்ட அந்த விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும் இரண்டாவதாகத் தேசிய கீதமும் மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. அது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், திருநெல்வேலி எம்பி ராபா்ட் புரூஸ், நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
ஆளுநர் மாளிகை உத்தரவிட்டதன் பேரிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது எனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இத்தகைய செயல்பாடு தவறான போக்கு எனத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



