புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி காஷ்மீரின் புதிய முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார். அவர் பதவியேற்ற மறுநாளே, ஜம்மு- காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கவேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் உமர் அப்துல்லா, வியாழக்கிழமை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துள்ளார். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து அவர்களிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு கூடிய சீக்கிரம் மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சமாக 10 விழுக்காட்டு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க முடியும். மாநிலத் தகுதி கிடைத்தபிறகு 15 விழுக்காட்டினரை அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
இதுகுறித்து, மத்திய அரசிடமும் முதல்வர் உமர் அப்துல்லா நேரடியாக வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

