போகபுரம் விமான நிலையத்தைத் திறந்துவைக்கிறார் நரேந்திர மோடி

போகபுரம் விமான நிலையத்தைத் திறந்துவைக்கிறார் நரேந்திர மோடி

2 mins read
cfa9c3a6-c050-42a9-a921-edef74fa3105
புதிய விமான நிலையம் வட ஆந்திர மக்களின் ஆகாயப் பயணத்தை எளிதாக்கும் என்றும் அப்பகுதியின் சுற்றுலா, வணிகம், சரக்குப் போக்குவரத்து, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பிடிஐ
Google News Preferred Icon

அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் ஏறக்குறைய 5,000 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) திறந்துவைக்கிறார்.

முதற்கட்டமாக, ஆண்டுக்கு ஆறு மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் அந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதன் கொள்திறனை 40 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வகையில் உயர்த்த முதன்மைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்க சனிக்கிழமை காலை 10:45 மணியளவில் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி போகபுரம் சென்றடைவார்.

ஆளுநர் எஸ்.அப்துல் நசீர், முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரை வரவேற்பர். காலை 10:58 மணிக்கு விமான நிலைய முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்துவைத்து, பார்வையிடுவார்.

அதன்பின், திறந்தவெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் பிரதமருக்கு, 13,500க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்களும் மாணவர்களும் ‘திம்சா’ நடனமாடி உற்சாக வரவேற்பு அளிப்பர்.

அதனைத் தொடர்ந்து, திரு மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

போகபுரம் விமான நிலையம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய வட ஆந்திரப் பகுதிகளின் பொருளியல் வளர்ச்சி, சுற்றுலா, தொழில் முதலீடு, ஏற்றுமதி, சரக்குப் போக்குவரத்துத் துறைகளை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெட்ரோலியம், தரைவழிப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளின் ரூ.18,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, சில நிறைவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். அதன்பின், பிற்பகல் 1:10 மணிக்கு அவர் டெல்லிக்குப் புறப்படுவார்.

குறிப்புச் சொற்கள்
விமான நிலையம்பயணிகள்சந்திரபாபு நாயுடுபிரதமர்