இந்தியாவில் வணிக எரிவாயுக் கலன்களின் விலை உயர்வு

புதுடெல்லியில் ரூ.3,113.50, கோல்கத்தாவில் ரூ. 3,255.50க்கு விற்பனை

இந்தியாவில் வணிக எரிவாயுக் கலன்களின் விலை உயர்வு

2 mins read
96ee0d0e-0c4b-4a85-a08f-1e098330d3db
வீட்டு உபயோக சமையல் எரிவாயுக் கலன்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான திரவ இயற்கை எரிவாயுக் (எல்பிஜி) கலன்களின் விலை ரூ. 42 முதல் ரூ. 53.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய மோதலுடன் தொடர்புடைய அண்மைய விநியோக இடையூறுகளைத் தொடர்ந்து, எரிபொருள் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கும் இருப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் மத்தியில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

புதுடெல்லியில் 19 கிலோ வணிக எல்பிஜி கலனின் விலை ரூ. 42 உயர்த்தப்பட்டு, அதன் சில்லறை விலை ரூ. 3,113.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோல்கத்தாவில் இன்னும் அதிகமாக ஒரு கலனுக்கு ரூ. 53.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அதன் விலை ரூ. 3,255.50 ஆக இருக்கின்றது.

இந்த விலை மாற்றம் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இது ஹோட்டல்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பயன்படுத்தும் வணிகக் கலன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயுக் கலன்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஐந்து கிலோ எடையுள்ள சிறிய சமையல் கலனின் விலையும் ரூ. 11 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 821.50க்கு விற்கப்படுகிறது.

போர்ப்பதற்றம் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட ஆற்றல் வளங்களை இந்தியா சார்ந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு உத்தியை அந்நாட்டு அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.

குறைந்தபட்சம் 30 நாள்களுக்கான தேவையையாவது பூர்த்தி செய்யும் வகையில் எல்பிஜி கலன்களின் இருப்புகளைப் பராமரிக்க அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்தார்.

இந்தியாவில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் உற்பத்தியும் அதிக அளவில் நடப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பதுக்கல், கள்ளச்சந்தையைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்கால விநியோகத் தடைகளைச் சமாளிக்கும் வகையில் கூடுதல் எல்பிஜி கலன் சேமிப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பு ஐஓசி (IOC), பிபிசிஎல் (BPCL), எச்பிசிஎல் (HPCL) ஆகிய மூன்று மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களும் எரிபொருள் பதுக்கலுக்கு எதிராக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்