மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு

2 mins read
66f526c0-29af-41d7-b30b-7db059dd1b80
கோல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சனிக்கிழமையன்று சென்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்காளத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சஞ்சய் ராய் என்பவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து, கோல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட தாமதத்தால் விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் ரூ.2 லட்சம் நிதி நிவாரணமாக வழங்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, “உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்