புதுடெல்லி: இந்தியாவில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 134.8 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தச் சாதனை இலக்கு எட்டப்பட்டது. அதே வேளையில், புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வதில் ‘ஜியோ’ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி அதன் போட்டியாளரான ‘பாரதி ஏர்டெல்’ நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தியத் தகவல் தொடர்புத்துறை சார்ந்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை (ஜூலை 29) வெளியிட்டது.
மாதாந்தர அறிக்கையின்படி, கடந்த மே மாத இறுதியில் 134.31 கோடியாக இருந்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஜூன் மாத இறுதியில் 134.81 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
அவர்களில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 87 விழுக்காட்டு வாடிக்கையாளர்களை வசப்படுத்தி உள்ளன.
மொத்த புதிய வாடிக்கையாளர்களில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் 31.63 லட்சம் பேரை இணைத்துக்கொண்டுள்ளது.
அவர்களில் கைப்பேசிப் பிரிவில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். ‘லேண்ட் லைன்’ எனப்படும் நில (தரை) வழி இணைப்பில் 1.73 லட்சம் பேரும் இணைந்துள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த கம்பியில்லாத் தொலைபேசி (வயர்லெஸ்) சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதம் 129.4 கோடியாக இருந்தது. அது ஜூன் மாதம் 130 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவில் 53.22 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் நீடிக்கிறது.
அதிவேக விரிவலைச் சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, மே மாதத்தில் 108 கோடியாக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 108.75 கோடியாக அதிகரித்துள்ளது என ஒழுங்குமுறை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.



