திருமண நாள் பரிசு தராத கணவருக்குக் கத்திக்குத்து

திருமண நாள் பரிசு தராத கணவருக்குக் கத்திக்குத்து

1 mins read
மனைவிமீது கொலை முயற்சி வழக்கு
bcd3fee4-6026-493a-aca4-c15e7006ae62
மாதிரிப்படம்: - பிக்சாபே
Google News Preferred Icon

பெங்களூரு: திருமண நாள் பரிசு தராத ஆத்திரத்தில் பெண் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனைக் கத்தியால் குத்தினார்.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் பெங்களூரு நகரில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிகழ்ந்தது.

இதனையடுத்து, 35 வயது சந்தியா (உண்மைப் பெயரன்று) என்ற அப்பெண்மீது காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது.

அப்பெண்ணின் கணவரான 37 வயது கரண் (உண்மைப் பெயரன்று), தான் உறக்கத்தில் இருந்தபோது பின்னிரவு 1.30 மணியளவில் சந்தியா தன் கையில் கத்தியால் குத்தியதாகக் காவல்துறையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கரண், தன் மனைவி மேலும் தன்னைத் தாக்கிவிடாதவாறு அவரைத் தள்ளிவிட்டார்.

பின்னர், அண்டை வீட்டாரின் துணையுடன் கரண் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

கத்திக்குத்தால் அவர் காயமுற்றதால், மருத்துவர்களே காவல்துறைக்கு ஒரு மருத்துவ-சட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

“சந்தியாமீது மார்ச் 1ஆம் தேதி வழக்கு பதிந்து, அவரிடம் விசாரணை நடத்தினோம். இது குடும்ப விவகாரம் என்பதால், இணையர் இருவரும் கலந்துபேச அறிவுறுத்தியுள்ளோம். தன் தாத்தாவின் நினைவுநாள் என்பதால், தன் மனைவிக்குத் திருமண நாள் பரிசு வாங்கவில்லை என்று கரண் கூறினார். திருமண நாளுக்கு அவர் பரிசு தராதது இதுவே முதன்முறை என்பதால் சந்தியா கோபமடைந்தார். சில குடும்ப விவகாரங்களால் சந்தியா குழப்பத்தில் உள்ளார் என்றும் அவரை மனநல ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும் என்று கரண் கேட்டுக்கொண்டார்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்