புதுடெல்லி: இந்தியாவிற்குள்ளேயே வேலை வாய்ப்புத் தேடி வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான தினக்கூலி ஊழியர்கள், புதுடெல்லியைவிட்டு நிரந்தரமாக வெளியேறுவது குறித்து யோசித்துவருகின்றனர்.
மத்திய கிழக்கு மோதலால் எரிசக்தி வளங்கள் நலிவடைந்துவருவதை முன்னிட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்வரை செல்லக்கூடிய அத்தகைய ஊழியர்களிடையே அந்த எண்ணம் தோன்றியுள்ளது.
கருப்புச் சந்தையில் கிடைக்கக்கூடிய சமையல் எரிவாயுக் கலன்களுக்கான விலை கணிசமாகக் கூடியிருப்பதாகக் கூறிய அவர்கள், எரிசக்தி விநியோகம் பழைய நிலைக்குத் திரும்பினாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மாறுவதற்குப் பல வாரங்கள் ஆகலாம் என்றனர்.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டுமான ஊழியர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
“கையில் உள்ள பணம் செலவழிந்த பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவோம்,” என்றார் 1,000 கிலோமீட்டர் தூரம் உள்ள பீகார் மாநிலத்திலிருந்து புதுடெல்லிக்கு வேலைக்கு வந்த திரு மிலான் மொன்டல்.
2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவிற்குள் 450 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் வேலை வாய்ப்புத் தேடி வெவ்வேறு மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் பயணம் செய்தனர்.
பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வசதி குறைந்த மாநிலங்களிலிருந்து கட்டுமானத் துறைகளிலும் தொழிற்சாலைகளிலும் தினக்கூலிகளாக வேலை செய்ய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவ்வப்போது பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
திரவப் பெட்ரோலிய எரிவாயுவில் 60 விழுக்காடு உள்பட அதிக அளவு எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கான விநியோகம் மத்திய கிழக்குப் போரால் தடைபட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்த திரவ பெட்ரோலிய எரிவாயுவுக்குத் தற்போது தட்டுப்பாடு இல்லை என்ற இந்திய அரசாங்கம், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குச் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதிசெய்கிறது.
ஆனால் தினக்கூலிகளுக்கு அந்த உதவி கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.
பதிவுசெய்யப்பட ஒவ்வொரு குடும்பத்துக்கும் திரவ பெட்ரோலிய எரிவாயு வழங்கப்படுவதாகக் கூறிய அரசாங்கம், கிராமங்களில் உள்ள தினக்கூலிகளின் குடும்பம் அவற்றைப் பெறுவதாகக் குறிப்பிட்டது.

