‘நீட்’ மறுதேர்வு: 200,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணிப்பு

‘நீட்’ மறுதேர்வு: 200,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணிப்பு

2 mins read
357da72c-6f10-4b70-82f9-4de405e93d0a
2026 மே 3ஆம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மீண்டும் அத்தேர்வு நடத்தப்பட்டது. - கோப்புப்படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: இவ்வாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 200,000க்கும் மேற்பட்டோர் ஜூன் 21ஆம் தேதி நடத்தப்பட்ட மறுதேர்வை எழுத வரவில்லை என்று தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) முதற்கட்டப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மே 3ஆம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மீண்டும் அத்தேர்வு நடத்தப்பட்டது.

முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்வில் மொத்தம் 2,205,035 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், மறுதேர்வைக் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மாணவர்களே எழுதியுள்ளனர். இது தோராயமாக 9 விழுக்காடு சரிவாகும். துல்லியமான புள்ளிவிவரங்கள் இன்னும் தொகுக்கப்பட்டு வருவதாக என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, முதல் தேர்விற்கும் மறுதேர்விற்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தபட்சம் 21 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட அவலமும் நிகழ்ந்துள்ளது.

வினாத்தாள் கசிவாலும் தேர்வு முறையின்மீது ஏற்பட்ட நம்பகத்தன்மை குறைவாலும் மாணவர்கள் அடைந்த மன உளைச்சலே இந்த எண்ணிக்கை சரிவுக்குக் காரணம் என்று கல்வி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், தேசிய தேர்வு முகமையோ வேறு காரணங்களை முன்வைக்கிறது.

இந்தியக் கல்விக் கழகம் (ஐஐடி) போன்ற பொறியியல் படிப்புகளுக்கான ‘ஜேஇஇ’ நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களின் மருத்துவக் கனவைக் கைவிட்டிருக்கலாம் என்றும் ஒருசிலர் வெளிநாட்டுப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மே 6ஆம் தேதியன்று முதன்மைத் தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியான பிறகு, தங்களால் இந்தத் தேர்வில் தேற முடியாது என்று உணர்ந்த மாணவர்கள் சிலரும் மறுதேர்வைப் புறக்கணித்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்