நீட் தேர்வு விவகாரம்: நீடிக்கும் சமூக ஆர்வலரின் உண்ணாவிரதப் போராட்டம்

நீட் தேர்வு விவகாரம்: நீடிக்கும் சமூக ஆர்வலரின் உண்ணாவிரதப் போராட்டம்

2 mins read
89270ef8-f5e4-417d-8895-439d8e691ec4
சோனம் வாங்சுக் உடல்நிலையை அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 19ஆம் நாளை எட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கினார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. லடாக் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இதில் பங்கேற்றுள்ளார். இதனால் அவரது உடல்நலம் மோசமடைந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றில், மத்திய அரசுக்கு சோனம் வாங்சுக் மீது குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், இந்திய அரசு உணர்வற்று இருப்பதாகவும் ஒரு கொடுங்குற்றவாளி, தேசத்துரோகி, தீவிரவாதியைப்போல் சோனம் வாங்சுக்கை நடத்துவதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது என்றும் இந்த உயிரைக் காக்க அரசு அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

மேலும், சோனம் வாங்சுக் உடல்நிலையை அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, வினாத்தாள் கசிவு தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தின்போது மாணவர்களின் குரல், சக்திவாய்ந்த முழக்கமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை ஏலம்விட அனுமதிக்க மாட்டோம் என்றும் கனவுகள் வீணாகிப்போக அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்