ஜூன் 21ல் நீட் மறுதேர்வு எனத் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜூன் 21ல் நீட் மறுதேர்வு எனத் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

2 mins read
902f0ab5-4dbf-45d1-9563-4c7d5b3b500c
கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். - படம்: தி எக்கானமிக் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: பலத்த எதிர்ப்பு நீடித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜூன் 21ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு மீண்டும் நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகைமை அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மட்டுமன்றி, பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர்வதற்கும் மறுதேர்வு நடைபெற உள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

எனினும், ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்தது தெரியவந்துள்ளது. இதனால் அன்று நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 86 முறை தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்ட முறை மறுதேர்வு நடத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வை ரத்து வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யும் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் எனத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏற்கெனவே நடந்த தேர்வில் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் மீண்டும் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீட் மறுதேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும் அவர் வெள்ளிக்கிழமை (மே 15) அறிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெள்ளிக்கிழமை (மே 15) போராட்டத்தில் ஈடுபட்டன.

குறிப்புச் சொற்கள்
நீட் தேர்வுமாணவர்கள்வினாத்தாள்