டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் விபத்துக்குள்ளான பல வாகனங்கள்: 13 பேர் மரணம்

1 mins read
901ef248-fb3f-4af6-bb11-321595653942
டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பேருந்து தீப்பற்றி எரியும் காட்சி. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் ஏற்பட்ட பெருவிபத்தில் 13 பேர் மாண்டனர். மேலும் 35 பேர் காயமுற்றனர்.

மதுரா நகரில் யமுனா விரைவுச்சாலைப் பகுதியில் கடும் பனியால் ஏழு பேருந்துகளும் மூன்று கார்களும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) காலை சுமார் 5 மணிக்கு விபத்துக்குள்ளாயின. பனிமூட்டத்தின் காரணமாக எதுவும் தெளிவாகத் தெரியாததால் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்தது. சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

காவல்துறை உயரதிகாரி ‌‌‌ஷுலோக் குமார் விபத்து நிகழ்ந்ததை உறுதிசெய்தார். தேடி, மீட்கும் பணிகள் நடைபெறுவதாக அவர் சொன்னார்.

விபத்தின் காரணமாக விரைவுச்சாலையில் போக்குவரத்துத் தடைபட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பயணிகளை அரசாங்க வாகனங்களின் மூலம் அவரவர் ஊர்களுக்குக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

விபத்து நேர்ந்தவுடன், மீட்புப் பணிகளில் உதவ தீயணைப்புத் துறை, காவல்துறை, உள்ளூர் நிர்வாகத் துறை முதலியவற்றின் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன.

காயமுற்றவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்த அடுத்த நாள் யமுனா விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏறக்குறைய 20 வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்