ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து சவூதி இளவரசரிடம் பேசிய மோடி

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து சவூதி இளவரசரிடம் பேசிய மோடி

2 mins read
6a117e93-7f39-4fde-83be-c663a75d0182
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியச் சமூகத்தின் நலனுக்காகத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பட்டத்து இளவரசருக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பேசியதாகவும் அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் போர்ச்சூழல் குறித்து தாம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், வட்டார அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ள அவர், கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான அவசியம் எழுந்துள்ளதை இருதரப்பும் ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

கப்பல் வழித்தடங்களைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை இரண்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

சவூதி அரேபியாவில் உள்ள இந்தியச் சமூகத்தின் நலனுக்காகத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பட்டத்து இளவரசருக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்க: மோடி

இதனிடையே, மத்திய கிழக்கில் நடந்துவரும் போர் ஐந்தாவது வாரமாக நீடிக்கிறது. போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க இயலாத சூழலில், இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து மாநிலங்களும் மக்களின் நம்பிக்கை வலுவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சவால்களை எதிர்கொள்வது என்பது கூட்டுப் பொறுப்பு என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை இந்திய மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் அவர் கலந்துரையாடினார்.

அப்போது, விநியோகப் பாதைகளில் ஏற்படும் நீண்டகாலத் தடைகளுக்குத் தயாராவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

மேலும், அண்மைய ஆண்டுகளில் இந்தியாவின் பொருளியல், விநியோக அமைப்புகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன என்றும் இதனால் நாடு நல்ல நிலையில் இருக்கும் என்றும் திரு மோடி உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்