தற்காப்பு, எரிசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மோடி - லாம் சந்திப்பு

தற்காப்பு, எரிசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மோடி - லாம் சந்திப்பு

2 mins read
e2e4a87f-3e0a-4f7a-8003-6ba90e3fb9e5
இருதரப்பு பேச்சுக்கு முன்னதாக, புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் வியட்னாமிய அதிபர் லாமும் கலந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், பொருளியல், தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வியட்னாம் அதிபர் டோ லாமும் புதன்கிழமை (மே 6) புதுடெல்லியில் பேச்சு நடத்தினர்.

திரு மோடியின் அழைப்பை ஏற்று, வியட்னாமிய அதிபர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மே 5ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அதிபர் லாம் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவருடன் முக்கிய அமைச்சர்களும் வர்த்தகக் குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.

இந்தியாவின் தேசியத் தற்காப்பு ஆலோசகர் அஜித் தோவலை மே 5ஆம் தேதி திரு லாம் சந்தித்தார்.

அப்போது, தற்காப்பு, செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க உருமாற்றம், புத்தாக்கம், எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக வியட்னாமிய அரசு இணையத்தளத்தில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

இருதரப்பு பேச்சுக்கு முன்னதாக, புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் வியட்னாமிய அதிபர் லாமும் கலந்துகொண்டனர்.

டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்கா உடனான உறவுகள் கணிக்க முடியாத நிலையில் இருப்பதாலும் ஈரான் போர் மத்திய கிழக்குடனான வர்த்தகத்தைப் பாதித்து வருவதாலும் இரு நாடுகளும் வட்டார உறவுகளை ஆழப்படுத்த முயன்று வருகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பொருளியல், கலாசார, உத்திபூர்வ உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ வெளியுறவுக் கொள்கையில் வியட்னாம் ஒரு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது.

அவ்விரு நாடுகளுக்கும் இடையே தற்காப்பு, பொருளாதார உறவுகள் வளர்ந்து வரும் நிலையில், வியட்னாமின் எட்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இரு மடங்காக உயர்ந்து கிட்டத்தட்ட 20.3 பில்லியன் வெள்ளியை (16 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்நரேந்திர மோடிதற்காப்புசெயற்கை நுண்ணறிவு

தொடர்புடைய செய்திகள்