புதுடெல்லி: டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) அதிகாலை ஏற்பட்டமோசமான தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதிகாலை 4 மணி அளவில் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீப்பிடித்தது. தகவல் அறிந்தவுடன் வந்த 14 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால், அதற்குள் தீ வேகமாக மூன்றாவது, நான்காவது மாடிகளுக்கும் பரவியது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 6 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக என்டிடிவி ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டடத்தின் படிக்கட்டுகளில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகள், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள், எரிந்து சாம்பலான தளவாடப் பொருள்கள் என அங்குள்ள சூழலை சமூக ஊடகத்தில் பரவிய காணொளிக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூராய்வுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.
எனினும், குளிரூட்டி (ஏசி) இயந்திரம் வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
“ஏசி வெடித்தவுடன் தீ வேகமாக எங்கும் பரவியது. ஏறக்குறைய 12 முதல் 15 பேர் வரை மீட்கப்பட்டாலும், மேலும் சிலரைக் காணவில்லை,” என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர்ச் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கோயல் நேரில் வந்து ஆய்வு செய்த நிலையில், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

