மணிப்பூர் முகாம்களில் 731 பேர் உயிரிழப்பு, 43,000 பேர் தவிப்பு

மணிப்பூர் முகாம்களில் 731 பேர் உயிரிழப்பு, 43,000 பேர் தவிப்பு

2 mins read
6e3c5e85-c395-4355-9ffc-52656a3a2bc9
தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தோரில் குறைந்தது 25 பேர் இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்துவிட்டனர். - கோப்புப்படம்: பிடிஐ
Google News Preferred Icon

இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் துயர்தணிப்பு முகாம்களிலும் தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருந்தோரில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக மாநில உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் இன மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர்க்காகத் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.

மோதல் தொடங்கி மூன்று ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் 43,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, காங்போக்பி மாவட்டத்தில் ஆக அதிகமாக 15,694 பேரும் விஷ்ணுபூரில் 10,092 பேரும் தங்கியுள்ளனர். ஒன்பது மாவட்டத் தரவுகளின்படி, மொத்தம் 731 பேர் முகாம்களிலேயே இறந்துவிட்டனர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆக அதிகமாக 248 மரணங்கள் பதிவாகியுள்ளன.

எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான ஹரேஷ்வர் கோஸ்வாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விக்குக் கிடைத்த பதில்கள்மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தோரில் குறைந்தது 25 பேர் இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்துவிட்டனர்.

சுராசந்த்பூரில் நீரில் மூழ்கி நால்வரும், மின்சாரம் தாக்கி ஒருவரும், பாலியல் வன்கொடுமையால் ஒருவரும் உயிரிழந்தனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் இருவர் தூக்கிட்டும், ஒருவர் அளவிற்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டும், மற்றொருவர் துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும் மாண்டுபோயினர்.

முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களின் உடல்நலம் சார்ந்த சவால்களையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் முகாம்களில் உள்ள 217 பேர் குணப்படுத்த முடியாத அல்லது அந்திமகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோசனை, மருந்து மாத்திரைகள், சக்கர நாற்காலிகள், அறுவைச் சிகிச்சைகளுக்கான நிதி உதவி போன்ற பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்துகொடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்