இணைய மோசடியில் 2 கோடி ரூபாய் இழந்த மங்களூர் ஆடவர்

இணைய மோசடியில் 2 கோடி ரூபாய் இழந்த மங்களூர் ஆடவர்

2 mins read
a062d3a1-8042-4939-b6f0-05209a92378c
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதிமுதல் பணப்பரிமாற்றம் தொடங்கியதாக ஏமாந்த ஆடவர் தெரிவித்தார். - கோப்புப் படம்

மங்களூர்: மங்களூரைச் சேர்ந்த 43 வயது ஆடவர் இணைய மோசடியில் 2 கோடி ரூபாய் இழந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதியன்று கைப்பேசியின் ‘வாட்ஸ்அப்’ செய்தியோடு மோசடி தொடங்கியது என்று மங்களூர் நகர காவல்நிலையத்தில் ஆடவர் தெரிவித்துள்ளார்.

அங்கிட் என்ற பெயரில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாதவர் அவரது நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடு இரட்டிப்பாகும் என்று உறுதியளித்திருந்தார்.

சூமிட் ஜஸ்வால், குஷாகர் ஜைன், அகில் ஆகிய மூவரும் லாபம் ஈட்டக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளை நிர்வகிப்போர் என்று அறிமுகப்படுத்தப்பட்டனர்.

புகாரளித்தவர், அங்கிட்டின் உத்தரவாதத்தை நம்பி, 3,500 ரூபாய் முதலில் அனுப்பிவைக்க உடனே, ‘லாபம்’ என்ற பெயரில் 1,000 ரூபாய் திரும்ப அனுப்பப்பட்டது.

லாபத்தால் ஈர்க்கப்பட்டு, சில மாதங்களில் படிப்படியாக அவரது கணக்குடன், மாமா, மனைவி, உறவினர்களின் கணக்குகளில் இருந்தும் பணம் அனுப்பப்பட்டது.

2022 - 2025் ஆகஸ்ட் 29ஆம் தேதிவரையில் 2 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை மோசடிக்காரர்களின் கணக்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களாகவே மோசடிக்காரர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எப்படியோ அங்கிட்டை புகார்தாரர் தொடர்புகொண்டபோது, குறிப்பிடப்பட்ட மூவரால் அவரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றக்கும்பலுடன் எவ்வித உறவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் மோசடிக் கும்பல், புகார்தாரரை அழைத்து காவல்துறையிடம் புகார் அளிக்காமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இறுதியில் குடும்பத்தினரிடம் உண்மையைக் கூறியபிறகு, புகார்தாரர் மங்களூர் நகரக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்