‘பைக்’கில் சென்றவர் கருநாகம் தீண்டி மரணம்

‘பைக்’கில் சென்றவர் கருநாகம் தீண்டி மரணம்

1 mins read
ab3b89b1-891f-4d73-bba0-79247cee2135
மாண்டுபோன மணீஷ், பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. - காணொளிப்படம்
Google News Preferred Icon

இந்தூர்: மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் கருநாகம் தீண்டியதில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மாண்டுபோனார்.

இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள தேலி கேடா எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.

மாண்டுபோன மணீஷ், பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் எனக் கூறப்பட்டது.

இச்சம்பவம் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

தம் ஊரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் கருநாகம் புகுந்துவிட்டதாக மணீஷுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தம் நண்பர் ஒருவருடன் அத்தொழுவத்திற்குச் சென்றார் மணீஷ். சில நிமிடங்களில் அவர் அப்பாம்பைப் பிடித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

பின்னர் அப்பாம்பைக் காட்டில் விட அவர்கள் முடிவுசெய்தனர். நண்பர் பைக்கை ஓட்ட, தம் இரு கைகளால் பாம்பைப் பிடித்தபடி பின்னால் அமர்ந்திருந்தார் மணீஷ்.

ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியதும், பாம்பு மணீஷைக் கொத்திவிட்டது. உடனே அவர் கீழே விழுந்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த மணீஷின் நண்பர், அவரைச் சோதித்தபோது, அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்திருந்தது.

மணீஷைப் பாம்பு இருமுறை கொத்தியிருக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.

இந்தூரைச் சுற்றிய காட்டுப் பகுதிகளில் கருநாகங்களும் வேறு நச்சுப் பாம்புகளும் மிகுதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கருநாகம்இந்தியாஉயிரிழப்பு