இறந்தவர்களின் விவரங்கொண்டு கடப்பிதழ் மோசடி: காவல்துறை அதிகாரி இடைநீக்கம்

1 mins read
d743876a-4c43-4601-8132-e5e305c5316d
கடப்பிதழ் மோசடி தொடர்பாகக் காவல்துறை அதிகாரி அன்சில் அஸீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். - படங்கள்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கடப்பிதழ் தொடர்பான மோசடிச் சம்பவம் ஒன்று, நாட்டுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தும்பா காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி அன்சில் அஸீஸ் என்பவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவரது உத்தரவின்கீழ், மோசடி வழிகளில் தகுதியற்ற பல நபர்களுக்குக் கடப்பிதழ்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

முறையான ஆவணங்களில்லாத நபர்களும் குற்றப் பின்னணியுடையவர்களும் கடப்பிதழ்களை உறுதிசெய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கமலேஷ் என்று அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர், போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தும்பா காவல் நிலையத்தில் கடப்பிதழ்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் அஸீஸ், கமலேஷ் தயாரித்த போலி அடையாளங்களைப் பயன்படுத்தித் தகுதியற்ற நபர்களுக்குக் கடப்பிதழ் கிடைக்கச் செய்ததாக நம்பப்படுகிறது.

மோசடி அம்பலமாகியுள்ள நிலையில் அஸீஸ் சரிபார்த்த அனைத்து கடப்பிதழ்களும் மீண்டும் மறுஆய்வு செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்களின் விவரங்களை கமலேஷ் பயன்படுத்தி போலி அட்டைகளைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல நபர்களை விசாரித்து வருகின்றனர். அஸீஸ் குறைந்தது 13 நபர்களின் கடப்பிதழ்களை உறுதிப்படுத்தியதாக அண்மைய நிலவரப்படி தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்