மகாராஷ்டிரா: அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் மரணம்

மகாராஷ்டிரா: அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் மரணம்

2 mins read
7bc4de15-6c76-4499-be9d-1661d9436128
கட்டடத்திலிருந்து வெளியேறாமல் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுவிட்டன. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை (ஜூலை 30) இரவு 11.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள் இருந்தன.

“இந்தக் கட்டடத்தைப் பல மாதங்களுக்கு முன்னரே ஆபத்தான வசிப்பிடம் என்று நகராட்சி நிர்வாகம் வரையறுத்து கடிதம் அனுப்பியது. இருந்தும் அதிலிருந்து சில மக்கள் வெளியேறாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்,” என்று அதிகாரிகள் கூறினர்.

ஏற்கெனவே பல்வேறு குடும்பங்கள் சரியான நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டடத்திலிருந்து வெளியேறாமல் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உட்பட 9 பேர் மாண்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சம்பவ இடத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தானே மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் ஒருவன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

“கட்டடத்தில் விரிசல் விழுவதாகத் தகவல் வந்ததுமே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். எங்கள் குழுவினர் வீடுவீடாகச் சென்று எல்லோரையும் வெளியேற்றினர். சில பெண்கள் ஒத்துழைக்கவில்லை.

“கட்டடத்தில் சட்டவிரோதமாக புதுப்பிப்புப் பணிகள் நடந்துவந்தன. குடியிருப்புவாசிகள் எல்லாரையும் ஒருவழியாக வெளியேற்றிய நிலையில் வேலையாள் மட்டும் வரவில்லை. நாங்கள் கட்டடத்திலிருந்து மக்களை வெளியேற்றிய சில நிமிடங்களில் மொத்தக் கட்டடமும் இடிந்து விழுந்தது,” என்று பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துணை ஆணையர் அரவிந்த் கோகரே விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்