இந்தியா - பாகிஸ்தான் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர நூற்றுக்கு மேற்பட்டோர் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர நூற்றுக்கு மேற்பட்டோர் கடிதம்

2 mins read
7a86a28f-0d59-481a-8dcf-67958ce980c6
அட்டாரி - வாகா எல்லை வழியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீக்கிய யாத்திரிகள். - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீடித்துவரும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதியையும் ஒத்துழைப்பையும் மீட்டெடுக்க இருநாட்டுப் பிரதமர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இரு நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியப் புள்ளிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

‘அமைதிக்கும் வளர்ச்சிக்குமான நிலையம்’ (Centre for Peace and Progress) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அந்தத் திறந்த மடலில் இரு நாடுகளையும் சேர்ந்த 117 முக்கியப் புள்ளிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, மனோஜ் ஜா உள்ளிட்ட 61 பேரும் பாகிஸ்தான் சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகம்மது கசூரி, அணுவாற்றல் விஞ்ஞானி பர்வேஸ் ஹூத்பாய் உள்ளிட்ட 56 பேரும் அவர்களில் அடங்குவர்.

“பல்லாண்டுகாலப் பகைமை நமது கூட்டுத்திறனைப் பாதித்து, சமூக, பொருளியல் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

“இரு நாடுகளும் ஒன்றின்மேல் ஒன்று வைத்துள்ள அவநம்பிக்கையைத் தவிர்த்து, இருநாட்டு இளையர்களின் எதிர்காலத்திற்காகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்,” என்று அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக, புதுடெல்லியிலும் இஸ்லாமாபாத்திலும் மீண்டும் தூதர்களை நியமித்து, முழுமையான தூதரக உறவுகளை மீட்டெடுப்பதுடன், விசா சேவைகளை இயல்பாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவது, அட்டாரி - வாகா எல்லையை வணிகத்திற்குத் திறப்பது, ஸ்ரீநகர்-முசாஃபராபாத் பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவது, இருநாட்டு வான்வெளியை வணிகப் போக்குவரத்திற்குத் திறந்துவிடுவது போன்ற நம்பிக்கையை ஊட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபையும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்