2025ல் 3,500 பேர்; 2026ல் 1,000 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

2025ல் 3,500 பேர்; 2026ல் 1,000 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

2 mins read
98e4c7ab-dd7a-4605-ab16-67af485085a0
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமளவிலான கடும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டிரம்ப் நிர்வாகம் அவர்களைக் குறிவைத்து நாடு கடத்தி வருகிறது. - படம்: என்டிடிவி
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 3,500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த 2025ஆம் ஆண்டில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையிலான காலகட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகப் பெருமளவிலான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“அதன் ஒரு பகுதியாக, இந்தியர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“2025ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து மொத்தம் 3,567 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

“இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 1,076 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

“இந்த விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றன,” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேற்றம், மக்கள் நடமாட்டம் தொடர்பான ஆலோசனைகள் இருதரப்பிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோதக் குடியேற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது, தடுப்பது என்பதில் இரு நாடுகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதே நேரத்தில், இந்த அதிரடி நடவடிக்கைகள் முறைப்படி சட்டபூர்வமாகப் புலம் பெயர்வோரைப் பாதிக்காத வண்ணம் இருப்பதை இரு நாடுகளும் உறுதி செய்து வருவதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்கக் குடியுரிமை, சுங்க அமலாக்கத்துறை அண்மையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 26 வயதான பர்மிந்தர்பால் சிங் என்ற இந்தியரைத் கைது செய்தது. அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்வதால் அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், சட்டபூர்வமான குடியேற்றத்தையே இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது என்றும், உரிய ஆவணங்கள் இல்லாத இந்தியர்களின் குடியுரிமையை முறையாகச் சரிபார்த்த பின்னரே அவர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எந்தவொரு நாட்டிலாவது ஒரு நபர் சட்டபூர்வ தகுதி இல்லாமல் இருந்து, அவர் இந்தியர் என்ற ஆவணங்களுடன் எங்களிடம் பரிந்துரைக்கப்பட்டால், நாங்கள் அவரது பின்னணியைச் சரிபார்த்து, அவர் இந்தியக் குடிமகன்தான் என்பதை உறுதி செய்த பின்னரே அவர் நாடு திரும்ப அனுமதிக்கிறோம்.

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் விவகாரங்களிலும் இந்தச் சரிபார்ப்பு நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
குடியேற்றம்டோனல்ட் டிரம்ப்வெளியுறவு அமைச்சுஇந்தியர்கள்