சபரிமலை ரயில் பாதைத் திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல்

சபரிமலை ரயில் பாதைத் திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல்

1 mins read
6079b2e1-e42f-44f4-af16-654d9ecd8c49
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. - படம்: ஏபிபி நியூஸ்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: சபரிமலை ரயில் பாதைத் திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான செலவில் 50 விழுக்காட்டை ஏற்கவும் முன்வந்துள்ளது.

சபரி மலைக்குச் செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு வசதியாக கேரள மாநிலத்தின் எருமேலி, அங்கமாலி பகுதிகளுக்கு இடையே 110 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. எனினும் நிலம் கையகப்படுத்துதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் முடங்கிப்போனது.

இதனிடையே, திட்டத்தின் மொத்தச் செலவும் ரூ.3,800 கோடியாக உயர்ந்து நிற்கிறது. அண்மையில் இத்திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விவரம் கேட்கப்பட்டது.

அப்போது திட்டச் செலவில் 50% தொகையைக் கேரள அரசு ஏற்க வேண்டும் என்றும் உடனடியாக நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, ரயில் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த கேரள மாநில அரசு சம்மதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் புதிய ரயில் பாதையை மேலும் நீட்டித்து விழிஞ்சம் துறைமுகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.

இது அம்மாநிலத்தின் மலைப் பகுதிகளுக்கு ஓர் உயிர்நாடித் திட்டமாகவும் கேரளப் பொருளியலுக்கு பெரும் உந்துதலாகவும் அமையும் என மாநில அரசு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்