திருவனந்தபுரம்: இந்திய மாநிலங்களுள் ஒன்றான ‘கேரளா’ இனி ‘கேரளம்’ என்றழைக்கப்படும்.
அதற்கான புதிய தீர்மானம் கேரள மாநிலச் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 24) நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே ‘கேரளம்’ எனப் பெயரை மாற்றும் தீர்மானம் கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஆயினும் சில பிழைகளைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு அதனைத் திருப்பி அனுப்பிவிட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய தீர்மானம் கேரளச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மூன்றாவது சட்டப்பிரிவின்கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, முதலாவது அட்டவணையில் ‘கேரளா’ என்றிருப்பதை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

