பேரவையில் இருந்து வெளியேறிய கர்நாடக ஆளுநர்

பேரவையில் இருந்து வெளியேறிய கர்நாடக ஆளுநர்

1 mins read
d72a73f3-b12b-4710-9d5d-aadc1413c3bc
தவார்சந்த் கெலாட். - படம்: தி இந்தியா டுடே

பெங்களூரு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பின்பற்றி, கர்நாடக மாநில ஆளுநரும் பேரவையில் தனது உரையை வாசிக்காமல் திடீரென வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி கர்நாடகா சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஜனவரி 22) தொடங்கியது.

வழக்கமாக ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில், ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது உரையில் இரண்டு வரிகளை‌ மட்டுமே வாசித்த கெலாட், சட்டென உரையை நிறுத்திவிட்டு பேரவையில் இருந்து வேகமாக வெளியேறினார்.

அவரது உரையை பேரவை மரபுப்படி கர்நாடக அரசு தயாரித்திருந்தது. எனினும், அந்த உரையில் இடம்பெற்றிருந்த 11 பத்திகளில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றும் அதனால்தான் அவர் உரையை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து தனது உரையை வாசிக்காமல் தமிழக ஆளுநர் ரவி வெளியேறினார்.

இதையடுத்து, தென்னிந்திய மாநிலங்களின் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக கடும்‌ விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்