‘என்னை இஸ்ரோ தலைவராகவிடாமல் தடுக்க முயன்றார் சிவன்’

‘என்னை இஸ்ரோ தலைவராகவிடாமல் தடுக்க முயன்றார் சிவன்’

2 mins read
முன்னாள் இஸ்ரோ தலைவர்மீது இந்நாள் தலைவர் குற்றச்சாட்டு
d52b1c83-83d7-44b7-8a90-84d13c73a308
இப்போதைய இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் (இடது), முன்னாள் தலைவர் கே.சிவன். - படங்கள்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.சிவன், தன்னை இஸ்ரோ தலைவராக விடாமல் தடுக்க முயன்றதாக அதன் இப்போதைய தலைவர் எஸ். சோமநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் சோமநாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான சோதனைகளை மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக ஏவியதால்தான் சந்திரயான்-2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாகவும் சோமநாத் சாடியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ஏ.எஸ்.கிரண் குமார் ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து, அப்பதவிக்குத் தன் பெயரும் சிவன் பெயரும் தெரிவுசெய்யப்பட்டதாக சோமநாத் கூறினார். தனக்கு அப்பதவி கிடைக்கும் என நம்பியபோதும், அது சிவன்வசம் சென்றதாக சோமநாத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இஸ்ரோ தலைவரான பிறகும், விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குநர் பதவியிலிருந்து சிவன் விலகவில்லை. அந்தப் பதவி தனக்குரியது என்று சிவனிடம் தான் கேட்டபோதும், சிவன் பதில் கூறாமல் நழுவிவிட்டதாக சோமநாத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த விண்வெளி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் பி.என்.சுரேஷ் தலையிட்டதையடுத்து, ஆறு மாதங்களுக்குப்பின் சோமநாத் அப்பொறுப்பில் அமர்ந்தார்.

இஸ்ரோ தலைவராக மூவாண்டுகாலம் பதவி வகித்த பின்னும் ஓய்வுபெறாமல், அப்பதவியில் தொடர முயன்றதாக சிவன்மீது சோமநாத் குற்றம் சுமத்தியுள்ளார்.

சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கவிருந்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவிற்குச் சென்றார். அப்போது, பிரதமரை வரவேற்பதற்கான குழுவில் தம்மை இடம்பெறவிடாமல் தள்ளியே வைத்திருந்ததாகவும் சோமநாத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மென்பொருள் தவற்றால்தான் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதில் தோல்வி அடைந்தது என்ற உண்மையை மறைத்து, இறங்குகலத்துடன் (லேண்டர்) தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சோமநாத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து சிவனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, “இஸ்ரோ தலைவர் சோமநாத் தன் வாழ்க்கை வரலாற்று நூலில் என்ன எழுதியுள்ளார் என்பது எனக்குத் தெரியாது. அதனால், இவ்விவகாரம் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது,” என்று சிவன் பதில் கூறியதாக ‘மனோரமா’ செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்