பெங்களூரு: கர்நாடகாவில் டிகே சிவகுமார் தலைமையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 4 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகிக்கலாம் என்று கூறிய சமரச திட்டத்தை ஏற்று சித்தராமையா முதல்வரானார்.
மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுகளை ஏற்று கர்நாடகத்தின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையுடன் சித்தராமையா, தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் மாளிகையில் ஒப்படைத்தார்.
இதையடுத்து அந்த விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, கர்நாடக அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி சென்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சரவை மாற்றம் குறித்துப் பேச ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்திப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தராமையா அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களுக்கு டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த அமைச்சரவையில் நான்கு துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சித்தராமையாவின் மகனும் சட்டமேலவை உறுப்பினருமான யதீந்திரா, டி.கே. சிவகுமார் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும், தனது தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் அவருக்கு அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

