புதுடெல்லி: கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியதைப் போலவே ஈரான் போரும் இந்தியப் பொருளியலில் கடும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதன் பாதிப்புகள் பல்லாண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடுமையான பொருளியல் பாதிப்பு, வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவை அதன் முன்னேற்றப் பாதையிலிருந்து விலக்கிவிடக்கூடிய அச்சுறுத்தலை உருவாக்கும் என்கின்றனர் அவர்கள்.
எரிவாயுப் பற்றாக்குறையும் ஏறிவரும் எண்ணெய் விலையும் ஏற்கெனவே பாதிக்கத் தொடங்கிவிட்டதால், அவற்றிலிருந்து வர்த்தகங்களையும் மக்களையும் பாதுகாக்க கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகளை அரசாங்கம் கையாண்டு வருவதாக ஊடகங்களிடம் அந்த அதிகாரிகள் கூறினர்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்காக 2 முதல் 2.5 டிரில்லியன் ரூபாய் (S$34 பில்லியன்) மதிப்புள்ள கடன் உத்தரவாதத் திட்டமும் அத்தகைய உத்திகளில் ஒன்று என்றனர், தங்களது அடையாளத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாத அதிகாரிகள்.
இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய்ப் பயனீட்டாளர் நாடாக உள்ளது. மேலும் தனது எரிவாயுத் தேவையில் ஏறத்தாழ 90 விழுக்காட்டை அது மத்திய கிழக்கிலிருந்து தருவிக்கிறது.
எரிசக்திக்கு இறக்குமதியையே பெரும்பாலும் சார்ந்துள்ளதால் ஆறாண்டுகளுக்கு முன்னர், 2020ல் பரவிய கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளியல் பாதிப்பை இந்தியா எதிர்நோக்கக்கூடும் என்பது அதிகாரிகளின் கணிப்பு.
போர் முடிவுக்கு வந்தாலும், வளைகுடா நாடுகள் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்ய வெகு காலம் பிடிக்கும். அதனால், திரவப் பெட்ரோலிய எரிவாயு உள்ளிட்ட எரிசக்திப் பொருள்களின் விநியோகம் இயல்புநிலைக்குத் திரும்ப நெடுங்காலம் ஆகலாம் என்றும் அவர்கள் கூறினர்.
ஓராண்டு முழுவதும் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்குச் சராசரியாக US$120ஆக இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்திய நிதி அமைச்சு சில உத்திகளை வகுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2027 மார்ச் வரையிலான நிதியாண்டில் 6.8 முதல் 7.2 விழுக்காடு வரை பொருளியல் வளரும் என்னும் கணிப்பில் அரசாங்கம் உறுதியாக இருந்தாலும், பல்வேறு பொருளியல் நிபுணர்கள் அந்த வளர்ச்சி விகிதத்தை ஏற்கெனவே குறைக்கத் தொடங்கிவிட்டனர்.
இவ்வாண்டின் வளர்ச்சி 5.9 விழுக்காடு என்று ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ குழுமம் கருதும் வேளையில், அது 6.2 விழுக்காடாக இருக்கும் என ‘ஆக்ஸ்ஃபர்ட் எக்கனாமிக்ஸ்’ கணித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் உத்தேச வளர்ச்சி விகிதத்தை 7 முதல் 7.5 விழுக்காடாக எதிர்பார்க்கின்றனர் கொள்கை வகுப்பாளர்கள். எட்டு விழுக்காட்டைத் தொடும் சாத்தியம் இருப்பதாகவும் சிலர் முன்னுரைக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளியல் திட்டத்தை நிறைவேற்றத் தேவையான குறைந்தபட்ச அளவு எட்டு விகித வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

