தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார். அவருக்கு வயது 88.
1957ல் இசைப்பயணத்தை தொடங்கிய அவர், தனித்துவமான குரலுக்காகவும், பல்வேறு இந்திய மொழிகளில் சரளமாகப் பேசும் திறனுக்காகவும் கலையுலகில் ‘ஜானகி அம்மா’ என்றும் அழைக்கப்பட்டவர்.
வயது மூப்பின் காரணமாக உடல்நலன் பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜானகி சனிக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரது உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திரைப்படங்கள், தனிப்பட்ட பாடல்கள், தொலைக்காட்சி, வானொலி எனப் பலவற்றிலும் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.ஜானகி.
அவரது தாய்மொழி தெலுங்கு. இருப்பினும், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்ற அவர், இசைத்துறையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பின்னணிப் பாடகியாக வலம் வந்துள்ளார். ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் ஜானகி பாடியுள்ளார்.
நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் 33 மாநிலத் திரைப்பட விருதுகளையும் வென்றுள்ள ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜானகியின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகத் திரு மோடி அப்பதிவில் குறிப்பிட்டார்.
“அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்,” என்று அவர் கூறினார். ஜானகி பாடிய பாடல்கள் ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத் தன்மையுடனும் ஒவ்வோர் உணர்வுக்கும் குரல் கொடுத்தன என்றும் அவரது மெல்லிசை வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும் என்றும் திரு மோடி சொன்னார்.
இந்திய அதிபர் திரெளபதி முர்முவும் ஜானகியின் மறைவு குறித்து சமூக ஊடகத்தில் இரங்கல் தெரிவித்தார்.
ரசிகர்கள் மனத்தில் ஜானகி என்றென்றும் நிலைத்திருப்பார் என்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜானகியின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.
ஜானகி நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருப்பார் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் முதல் அனிருத் வரை பலரது இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘கான கோகிலம்’ ஜானகியின் இசைப்பயணம் மிக நீண்டது என்று அவர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜானகியின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்தது.


