பயன்பாட்டுக்கு வந்த இந்தியாவின் முதல் மின்னிலக்க சுங்கச்சாவடி

பயன்பாட்டுக்கு வந்த இந்தியாவின் முதல் மின்னிலக்க சுங்கச்சாவடி

2 mins read
a5802f90-7b86-4966-831a-9ba94f274dda
தேசிய நெடுஞ்சாலை எண் 48ல் (என்ஹெச்-48) உள்ள சூரத் காம்ரேஜ் பகுதியில் இயங்கும் சுங்கச்சாவடி அண்மையில் முழுமையாக மின்னிலக்கமயமானது. - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தடையற்ற, பல வழித்தட (MLFF) மின்னிலக்கச் சுங்கச்சாவடி நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தச் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் சாவடியைக் கடந்து செல்ல முடிந்தது.

போக்குவரத்து தாமதிக்காமல் வாகனங்கள் வேகமாகச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக வாகனவோட்டிகள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலை எண் 48ல் (என்ஹெச்-48) உள்ள சூரத் காம்ரேஜ் பகுதியில் இயங்கும் சுங்கச்சாவடி அண்மையில் முழுமையாக மின்னிலக்கமயமானது.

ஏறக்குறைய ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லலாம்.

சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்கான அதிநவீன ‘ஸ்கேனர்’கள், கேமராக்கள், ‘ரேடார்’, நவீனத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நவீனத் தொழில்நுட்பப் பின்புலத்தில் சுங்கச்சாவடி இயக்குவதால் பணிகள் வேகமாக நடப்பதாகச் சொல்கின்றனர் சுங்கச்சாவடி ஊழியர்கள்.

கேமராக்களில் பதிவாகும் வாகனங்களின் விவரங்களை ஊழியர்கள் உடனுக்குடன் கண்காணிக்கின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் இந்தச் சுங்கச்சாவடி இயங்கத் தொடங்கியுள்ளது.

நாள்தோறும், ஏறக்குறைய 25,000 வாகனங்களை இந்தச் சுங்கச்சாவடி கையாள்கிறது. இதன்மூலம் ரூ.60 லட்சம் வருவாய் ஈட்டப்படுகிறது.

மனித ஆற்றலை மட்டும் கொண்டு இயங்கும்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க நேரிடும். பின்னால் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாய்ப்புண்டு.

இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மின்னிலக்கச் சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்த பின்னர், எரிபொருள் சேமிப்பு வாகனவோட்டிகளுக்குப் பலனளிக்கிறது. முக்கியமாகப் பயண நேரம் குறைகிறது.

“இந்திய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு புதிய சகாப்தத்துக்கு மின்னிலக்கச் சுங்கச்சாவடித் திட்டம் முன்னோடியாக அமைந்துள்ளது,” என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

குறிப்புச் சொற்கள்